இலக்கிய வரலாறு எழுதுவோர் பலரும் தனித்தமிழ் வரலாற்றைச் சரியாகக் காட்டுவதில்லை. தமிழ் இசை வெறுப்பாளர்கள் தெலுங்கு இசையை முழுமையாகப் பாடிவிட்டுக் கடைசியில் 'துக்கடா' என்னும் பெயரில் திருப்புகழ் பாடுவது உண்டு. அதைப் போல் 'புதுப்பா', 'துளிப்பா' என்பன பற்றியெல்லாம் மிக விரிவாக எழுதும் அறிஞர்கள் தனித்தமிழ் வரலாற்றைத் 'துக்கடா'வாகத்தான் கருதி எழுதுகின்றனர்.
அப்படி எழுதுவதிலும் பல பிழைகள் செய்துவிடுகின்றனர். அப்படி நேர்ந்த பிழைகள் மதிப்பு மிக்க இயக்கத்தாரிடமும் உண்டு; மாண்பு மிக்க அறிஞர்களிடத்திலும் உண்டு.தனித்தமிழ் இயக்கம் சரியான நேரத்தில் தொடங்கப்படாமல் விடப்பட்டிருக்குமானால், தமிழ்ப்பயிரை மணிப்பவளம் என்னும் ஆரிய வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டிருக்கும். அதனை விலகச் செய்த பெருமை மறைமலை அடிகலாரையே சேரும். அவர்க்குமுன் தமிழின் நன்மைக்காகச் செய்யப்பட்ட முயற்சிகள் எல்லாம் தமிழ்மொழி, இன, நாட்டு உணர்ச்சிகளை முதன்மைப் படுத்தவில்லை.
மலையாளிகள், தெலுங்கர்கள் எல்லாம் நிரம்பிய இயக்கமாக நீதிக்கட்சி இருந்தது. அதில் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆகியோரின் கைகள் ஓங்கி இருந்தன. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட அவ்வியக்கம் தமிழைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அவர்களால் தமிழ் உரிய வகையில் வளர்க்கப்படாததால் தமிழ் உரிமைக்காக பிறமொழித் தலைவகளிடம் தமிழர்கள் கெஞ்சவேண்டியதாய் இருந்தது.
மறைமலையடிகள் தோற்றுவித்த இயக்கமே தமிழ்க் குமுகாயத்தின் எல்லாவகை மீட்சிகளுக்கும் வழியாய் அமைந்தது. அடிமை முற்றிய இனத்தின் மீட்பு முயற்சியைக் கொச்சைப்படுத்தவும் அம்முயற்சியை இருட்டடிப்புச் செய்யவும் பெரிய முயற்சிகள் தமிழ்ப் பகைவர்களால் செய்யப்பட்டன. அதற்கு அவர்கள் கையாண்ட சில தந்திரங்களுள் ஒன்றாகவே பரிதிமாற் கலைஞர் நுழைப்பு அமைந்துள்ளது.
சிவனிய சமயத்திலேயே முழுக்கவனம் செலுத்தியிருந்த மறைமலையடிகள் அதிலிருந்து சிறிது விலகுவதற்கு அன்றைய மொழிச் சூழலே கரணியம் எனலாம். தமிழைப் போட்டி போட்டுக் கொண்டு பகைவர்கள் கெடுத்தனர். புலவர் என்போர் பணத்துக்காகவும், பட்டத்துக்காகவும் எதையும் பாடலாம், எப்படியும் பாடலாம் என்னும் போக்குடையவராய் இருந்தனர். தமிழைக் காக்க ஒருவரும் முன்வரவில்லை. அயல் நாட்டு மதப் பரப்பாளரான இராபர்ட்டுகால்டுவேல் எழுதிய ஒரு நூல் கிளர்ச்சிக்குத் துணை செய்தது. 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்பது அது.
தொடரும்...
![]() |
| மறைமலை அடிகளார் |
அதைக்கற்ற தமிழ் அறிஞர்கள் விழிப்பு அடைந்தனர். "தமிழ் தனித்து இயங்க வல்லது. ஆரியத்தின் துணை அதற்குத் தேவை இல்லை." வேண்டுமென்றே தமிழைக் கெடுப்பதற்காக வடசொற்கள் கலக்கப்பட்டன எனும் கருத்துகள் பலருடைய மனங்களை மாற்றியது. மனோன்மணியம் சுந்தரனார் கால்டுவெல் கருத்துகளைத் தம் பாட்டில் பதிவு செய்தார். மறைமலையடிகளிடம் ஏற்பட்ட தனித்தமிழ் எண்ணமே இயக்கமாக மலர்ந்தது. அவர் பல மாறுதல்களை விளைவித்தார். பெயர் மாற்றம் அவற்றுள் முதன்மையானது. வேதாசல சுவாமிகளாக இருந்த அவர் மறைமலையடிகள் ஆனார். அவருடைய மக்களுக்கும் பெயர்மாற்றம் செய்தார். மாணிக்கவாசகம், திரிபுரசுந்தரி, திருஞானசம்பந்தம் முதலிய பெயர்களை முறையே மணிமொழி , முந்நகர்அழகி , அறிவுத்தொடர்பன் என்று அவர் மாற்றினார். தம் மருமகன் குஞ்சிதபாதம் பெயரைத் தூக்கிய திருவடி என்றும் மாற்றினார். தம் மாத இதழான 'ஞானசாகரத்'தை 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். அவர் நடத்தி வந்த சன்மார்க்க சங்கத்தைப் 'பொது நிலைக் கழகம்' என்று அழைக்கச் செய்தார்.
அப்போதைய மொழியியல் மூட நம்பிக்கைகளை அவரின் எழுத்துகள் தகர்த்தன. வடமொழியிலிருந்து தமிழும் ஏனைய மொழிகளும் தோன்றின; வடமொழி தேவமொழி என்னும் கருத்துகளை அவரின் எழுத்துகள் தாக்கி அழித்தன.தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக