பொங்கல் விழாக் கொண்டாட்டம் என்று வாயோடு கூறி, நடைமுறையில் அதன் கொள்கைகளைப் பரப்பாமல் விட்டு விடுவதில் எப்பயனும் இல. வாயினால் கூறி வைத்தலும், ஏட்டிலே எழுதி வைத்தலும், பாக்களில் பாடி வைத்தலும் மட்டுமே பணியாகாது. ஆக, நடைமுறையில் என்ன செய்ய வேண்டும்? ஆரியர்களால் நம்மிடத்தே விதைக்கப்பட்டு, முளையுற்ற ஆரியப் பண்பாடு, இன்று நம் தமிழ் மரபின் குரல்வளையைப் பிடிக்கும் அளவிலுள்ளது. அவற்றை முறையே நீக்க, நம்மிடமும், நம் குடும்பத்தாரிடமும், உற்றார் உறவினரிடமும், ஏன் சமுதாயத்திடமே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பொங்கல் விழாக் காலத்திலாவது நம் வீட்டில் உள்ள நேரத்தில் உறவினரிடம் நல்ல தமிழில் பேசலாமே; குழந்தைகளுக்கு நல்ல தமிழினைக் கற்று தரலாமே. குழந்தைகளுக்கு திருக்குறளின் இன்றியமையாச் சிறப்பை எடுத்துரைத்து, அன்றாடம் அதிகாலையில் ஒவ்வொரு திருக்குறளாய்க் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்; தமிழின ஒற்றுமையை கற்பிப்போம்; ஒற்றுமை உணர்வை ஊட்டி வளர்ப்போம். அதனால் அவர்கள் நற்பழக்கங்களைக் கற்றுக் கொள்வதோடு, மனத்தெளிவும், செம்மையான சிந்தையும் பெறுவர்.
நம்மிடம் இருந்து விலகிப்போன, விலக்கப்பட்ட நம் தமிழர்ப் பண்புகளைப் பொங்கல் காலத்திலே பின்பற்றலாமே!
உணவு
நுண்ணலை அடுப்பு முதலியவற்றில் பொங்கல் ஆக்குவதில் என்ன பயன்? இச்சமயத்திலாவது பொங்கலைக் கலத்தில் செய்யலாமே! அடுப்பில் கலத்தை வைத்து, அருகே நின்று அதனைக் கவனித்து ஆக்கி, அனைவருக்கும் நம் கைகளால் அன்போடு பொங்கல் அளித்தால், அந்த இனிப்பால் அல்லவா உண்மை இன்பம் உண்டாகும்? வெறுமனே கடமைக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனும், எளிதான வழி என்றும் நுண்ணலை அடுப்பு முதலியவற்றில் ஆக்குவது நன்கா? தீங்கா? விரைவு உணவு உடலுக்கு ஆரோக்கியமானதோ?உடை
மக்கள் பண்புக்கேற்ற, சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தாத, இளைங்கர்களைச் சிதைக்காத, இவற்றிற்கெல்லாம் மேலாக, ஆண்டாண்டு காலமாய் வாழும் நம் நாகரிகத்தை உருகுலைக்காத உடைகள் என்ன என்று சிந்தியுங்கள்! அவ்வுடைகளா இப்போது கையாளப் படுகின்றன?
நம் அறிவை அலங்கோலமாக்கும், மக்கள் மானத்தை மண்ணொடு புதைக்கும், தமிழர்ப் பண்பைத் தரணியில் இருந்து ஒழிக்கும், பெண்டிர்க்கான கட்டுகளை உடைத்துப் பெண் சமூகத்தை உருகுலைக்கும் உடைகள் அல்லவா இக்காலத்தில் கையாளப்படுகின்றன!
தவறாக நினைக்க வேண்டாம்; நான் கூறுவது அனைத்துப் பெண்டிரையும் அல்ல. மானங்காக்கும் மதியுடைய பெண்டிர்ப் பட்டாளம் இன்றளவும் உள்ளது.
'காலத்தின் வேகத்திற்கு இது சரி வருமா?' எனக் கேட்டால் இயலாதுதான். ஆண்டு முழுதும் இல்லையே!
தமிழர்த் திருநாளானப் பொங்கல் பெருநாளிலாவது நம் மண்ணின் மரபை மதிக்கும் உடைகளை அணியலாமே! வயது முதிர்ந்த ஆண்களும், இளைங்கர்களும் கதர் வேட்டிச் சட்டைகளை அணியலாம். வயது முதிர்ந்த பெண்களும், இளம்பெண்களும் புடைவைத் தாவணிகளை அணியலாம். ஆனால், இன்று கருவுற்ற பெண்டிர்கூட உடலுக்கு ஒவ்வாத உடைகளை அல்லவா அணிகின்றனர்? ஆக, இப்போதுள்ள உடையுடுத்தும் பண்பாடு சீர்கேடின்றி இருத்தல் வேண்டும்.
இப்படி ஒவ்வொன்றாய்ச் சரியாய்ச் செய்தால்கூட, நம் தமிழ் மண்ணின் பெருமைத் தழைத்தோங்கும். அவ்வாறு நடக்க நீங்கள் என்ன செய்யவேண்டும்? நம் தமிழ்ப் பண்பை வீட்டினிலே உள்ளோரிடம் சொல்லுங்கள். குழந்தைகளிடம் தேவையற்றவற்றைச் சொல்லுவதைவிட, தமிழின் தனித்தன்மையையும் தமிழரின் தனிச்சிறப்பையும் நற்பண்புகளையும் எடுத்து உரையுங்கள்; ஆங்கில அறிவு இன்றைய காலகட்டத்தில் வேன்டியதுதான்; அதற்காக அதன் இழிவுத் தன்மையைக் கூற மறந்து விடாதீர்! இவற்றை அறியாதவரிடம் தெரியாதவரிடம் எடுத்து உரையுங்கள். அதற்கு முதலிலே நீங்கள் தயாராக வேண்டும்.
உங்கள் நிலை என்ன?
ஊம். மொழிந்து பரப்புங்கள்!!!




