புதன், 11 ஜூலை, 2012

அண்ணாவின் பண்பாடு !

    இந்தியாவின்  முழு ஆட்சியைத் தன்னிடத்தே வைத்துக்கொண்டு "எடுத்தேன் கவிழ்த்தேன்" என்று பேசக்கூடிய கட்சியாக இருந்தது, பேராயக் கட்சி.
அதன் தலைவர்கள் நேரு  முதல் காமராசர் வரை கழகத்தை  கேலியும் கிண்டலும் செய்து இளக்காரமாக   பேசி வந்தனர்.
அப்போது அண்ணா  சொன்னார்
   "பேராயக் கட்சி கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்; நாமோ கொட்டி வைக்கப்பட்டுள்ள  செங்கற்கள். கோபுரம் ஒரு காலத்தில் வீழும். செங்கற்கள் ஒரு காலத்தில்  கோபுரமாக உயரும்."
   இவ்வாறு அண்ணா சொல்லியது  போலவே  பிற்காலத்தில் பேராயக் (காங்கிரசு) கோபுரம்  வீழ்ந்ததும் உண்டு. கழகச் செங்கற்கள் கோபுரமாக உயர்ந்ததும் உண்டு.
   1957இல் நடந்த பொதுத் தேர்தலில் முதன் முதலாக திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது.
தமது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிடுகிறார்.
அண்ணா அவர்களை  எதிர்த்து மரு. பி. எசு.  சீனிவாசன்  என்பவரைப் பேராயக் கட்சி  நிறுத்தி போட்டியிடுகின்றது.
   அண்ணா அவர்களை ஆதரித்து ஏ. இராமசாமி (முதலியார்), காயிதே மில்லத்  முகம்மது இசுமாயில், கலைவாணர் என். எசு. கிருட்டிணன், என். சிவராசு உட்பட பெருமக்கள் பலரும்  பரப்புரை செய்கிறார்கள்.
   மரு. சீனிவாசனுக்குத் துணையாகத்  தந்தைப் பெரியார்  உட்பட திராவிடர் கழகத்தினரும், காமராசர்  உள்ளிட்ட பேராயத்தாரும் தீவிரமாக பரப்புரை செய்கிறார்கள்.
கீழ்த்தரம்
   இந்தக் கட்டத்தில் காஞ்சியில் ஒரு சுவரில் அண்ணா அவர்களைப் பற்றி மிகவும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி எழுதி வைத்திருந்தார்கள். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் கொதித்தெழுந்தனர். அண்ணா அவர்களிடம் சென்று,  " பார்த்தீர்களா அண்ணா, இந்தப்  படு தீய செயலை? உங்களையே இழிவு படுத்தி எழுதியவரின் கையை வாங்காமல் விடமாட்டோம்" என்றெல்லாம் பதறினார்கள். அந்தச் சுவர்  எழுத்தை  அழிக்கச் சிலர் விரைந்தனர்.
   அவர்கள் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா அவர்கள், கழகத் தோழர்களைப் பார்த்து , " சினப்பட வேண்டாம். அமைதியாக இருங்கள்.   இதுவும்  நமக்கு  நல்லதுதான். அந்தச் சுவர் எழுத்து இரவிலும்  நன்றாகத்  தெரியும் வண்ணம் அங்கே ஒரு 'ஆவி' விளக்கைத்  தொங்கவிட்டு, 'விளக்கு நன்கொடை அண்ணாதுரை' என்று எழுதி வையுங்கள்"  என்றார் அண்ணா; அப்படியே செய்தனர்.
   அந்த வழியே போவோர் வருவோரெல்லாம் நின்று அதனைப் படித்துப் பார்த்துவிட்டு 'எந்தப் பாவி அண்ணாவைப்பற்றி  இப்படி எழுதி வைத்திருக்கிறான்?" என்று முணுமுணுத்துக் கொண்டு சென்றனர்.
எழுதியவனும்,எழுதச்சொன்னவர்களும் வெட்கித் தலை குனிந்தனர். இந்த நிகழ்ச்சியும் அண்ணா வெற்றிக்குத்  துணை செய்தது எனலாம்.
   "ஏட்டிக்குப் போட்டி, மறுப்புக்கு மறுப்பு,  அடிக்கு அடி,  உதைக்கு உதை, பேச்சுக்குப் பேச்சு, ஏச்சுக்கு ஏச்சு" என்பனவெல்லாம் அரசியலில் வளர்ந்துவிட்ட போக்கு.
   அந்தப் போக்கினை அண்ணா அவர்கள் என்றுமே விரும்பியது இல்லை.
   "நாம், மாற்றாரின் கருத்துக்கு மறுகருத்தை எடுத்து வைக்க வேண்டுமேயொழிய தடிக்கம்பு அரசியல் நடத்த முற்படக் கூடாது"  என்பார் அண்ணா.
   "வேட்டு முறை நமக்கு வேண்டாம்; ஒட்டு முறைதான் நமக்கு தேவை" என்று அடிக்கடி எடுத்துச் சொல்லி வந்தார்.
                                                                                                                 வளரும்.....

வியாழன், 12 ஜனவரி, 2012

பொங்கல் பெருநாளில் தனித்தமிழ்த் தழைத்து ஓங்குக!

   பொங்கல் விழாக் கொண்டாட்டம் என்று வாயோடு கூறி, நடைமுறையில் அதன் கொள்கைகளைப் பரப்பாமல் விட்டு விடுவதில் எப்பயனும் இல. வாயினால் கூறி வைத்தலும், ஏட்டிலே எழுதி வைத்தலும், பாக்களில் பாடி வைத்தலும் மட்டுமே பணியாகாது. ஆக, நடைமுறையில் என்ன செய்ய வேண்டும்? ஆரியர்களால் நம்மிடத்தே விதைக்கப்பட்டு, முளையுற்ற ஆரியப் பண்பாடு, இன்று நம் தமிழ் மரபின் குரல்வளையைப் பிடிக்கும் அளவிலுள்ளது. அவற்றை முறையே நீக்க, நம்மிடமும், நம் குடும்பத்தாரிடமும், உற்றார் உறவினரிடமும், ஏன் சமுதாயத்திடமே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  பொங்கல் விழாக் காலத்திலாவது நம் வீட்டில் உள்ள நேரத்தில் உறவினரிடம் நல்ல தமிழில் பேசலாமே; குழந்தைகளுக்கு நல்ல தமிழினைக் கற்று தரலாமே. குழந்தைகளுக்கு திருக்குறளின் இன்றியமையாச் சிறப்பை எடுத்துரைத்து, அன்றாடம் அதிகாலையில் ஒவ்வொரு திருக்குறளாய்க் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்; தமிழின ஒற்றுமையை கற்பிப்போம்; ஒற்றுமை உணர்வை ஊட்டி வளர்ப்போம். அதனால் அவர்கள் நற்பழக்கங்களைக் கற்றுக் கொள்வதோடு, மனத்தெளிவும், செம்மையான சிந்தையும் பெறுவர்.
  நம்மிடம் இருந்து விலகிப்போன, விலக்கப்பட்ட நம் தமிழர்ப் பண்புகளைப் பொங்கல் காலத்திலே பின்பற்றலாமே!

உணவு
  நுண்ணலை அடுப்பு முதலியவற்றில் பொங்கல் ஆக்குவதில் என்ன பயன்? இச்சமயத்திலாவது பொங்கலைக் கலத்தில் செய்யலாமே! அடுப்பில் கலத்தை வைத்து, அருகே நின்று அதனைக் கவனித்து ஆக்கி, அனைவருக்கும் நம் கைகளால் அன்போடு பொங்கல் அளித்தால், அந்த இனிப்பால் அல்லவா உண்மை இன்பம் உண்டாகும்? வெறுமனே கடமைக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனும், எளிதான வழி என்றும் நுண்ணலை அடுப்பு முதலியவற்றில் ஆக்குவது நன்கா? தீங்கா? விரைவு உணவு உடலுக்கு ஆரோக்கியமானதோ?
உடை
  மக்கள் பண்புக்கேற்ற, சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தாத, இளைங்கர்களைச் சிதைக்காத, இவற்றிற்கெல்லாம் மேலாக,  ஆண்டாண்டு காலமாய் வாழும் நம் நாகரிகத்தை உருகுலைக்காத உடைகள் என்ன என்று சிந்தியுங்கள்! அவ்வுடைகளா  இப்போது கையாளப் படுகின்றன?
  நம் அறிவை அலங்கோலமாக்கும், மக்கள் மானத்தை மண்ணொடு புதைக்கும், தமிழர்ப் பண்பைத் தரணியில் இருந்து ஒழிக்கும், பெண்டிர்க்கான கட்டுகளை உடைத்துப் பெண் சமூகத்தை  உருகுலைக்கும் உடைகள் அல்லவா இக்காலத்தில் கையாளப்படுகின்றன!
  தவறாக நினைக்க வேண்டாம்; நான் கூறுவது அனைத்துப் பெண்டிரையும் அல்ல. மானங்காக்கும் மதியுடைய பெண்டிர்ப் பட்டாளம் இன்றளவும் உள்ளது.
'காலத்தின் வேகத்திற்கு இது சரி வருமா?' எனக் கேட்டால் இயலாதுதான். ஆண்டு முழுதும் இல்லையே!  
   தமிழர்த் திருநாளானப் பொங்கல் பெருநாளிலாவது  நம் மண்ணின் மரபை மதிக்கும் உடைகளை அணியலாமே! வயது முதிர்ந்த ஆண்களும், இளைங்கர்களும் கதர் வேட்டிச் சட்டைகளை அணியலாம். வயது முதிர்ந்த பெண்களும், இளம்பெண்களும் புடைவைத் தாவணிகளை அணியலாம். ஆனால், இன்று கருவுற்ற பெண்டிர்கூட உடலுக்கு ஒவ்வாத உடைகளை அல்லவா அணிகின்றனர்? ஆக, இப்போதுள்ள உடையுடுத்தும் பண்பாடு சீர்கேடின்றி இருத்தல் வேண்டும்.

  இப்படி ஒவ்வொன்றாய்ச் சரியாய்ச் செய்தால்கூட, நம் தமிழ் மண்ணின் பெருமைத் தழைத்தோங்கும். அவ்வாறு நடக்க நீங்கள் என்ன செய்யவேண்டும்? நம் தமிழ்ப் பண்பை வீட்டினிலே  உள்ளோரிடம் சொல்லுங்கள். குழந்தைகளிடம் தேவையற்றவற்றைச் சொல்லுவதைவிட,  தமிழின் தனித்தன்மையையும் தமிழரின் தனிச்சிறப்பையும் நற்பண்புகளையும் எடுத்து உரையுங்கள்; ஆங்கில அறிவு இன்றைய காலகட்டத்தில் வேன்டியதுதான்; அதற்காக அதன் இழிவுத் தன்மையைக் கூற மறந்து விடாதீர்! இவற்றை அறியாதவரிடம் தெரியாதவரிடம் எடுத்து உரையுங்கள். அதற்கு முதலிலே  நீங்கள் தயாராக வேண்டும்.
உங்கள் நிலை என்ன?

ஊம். மொழிந்து பரப்புங்கள்!!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

     தமிழ் உலகில் தமிழ் ஆண்டு  என்னும் பெயரில் வழக்கில் இருக்கின்ற  பிரபவ  முதல் அட்சய  வரை உள்ள  ௬௦(60) ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் ௬௦(60) ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை  அறிவு, அறிவியல், தமிழ் மண், மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.
   எனவே தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் ௧௯௨௧(1921)ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல்  மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. ௩௧(31). தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.
   இந்த முடிவை  ௧௮.௦௧.௧௯௩௫(18 .01.1935)ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகள் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிருத்து ஆண்டுடன் ௩௧(31)  கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். ௧௯௩௫+௩௧=௧௯௬௬(1935+31=1966).  அதை அறிஞரவை  ஏற்றுக்கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
   திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம்  தை ,  இறுதி மாதம்  மார்கழி . புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். (புதன்-அறிவன்,சனி-காரி).
  ஆங்கில ஆண்டுடன் ௩௧(31) கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு.
௨௦௧௨+௩௧=௨௦௪௩(2012+31=2043).

   தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று ௧௯௭௧(1971) முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும்,   ௧௯௭௨(1972) முதல் தமிழ்நாடு அரசு இதழிலும்,   ௧௯௮௧(1982) முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நாம் இம்முறையைப் பின்பற்றவும் பரப்பவும் வேண்டும்.
   உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒப்புஅற்ற உயிர்ப்பாற்றல் நான்கு :  தமிழ்மொழி  தமிழ்மறை , தமிழ்ஆண்டு ,  தமிழர் திருநாள் . இவற்றைப் போற்றிப் பின்பற்றிப் பரப்பினால்  தமிழர் நலவாழ்வு, வளவாழ்வு,பெருவாழ்வு, புகழ்வாழ்வு பெறுவது திண்ணம்.

          தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
          பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
          பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
          புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்

          நித்திரையில் இருக்கும் தமிழா!
          சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
          அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
          அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
          தரணி ஆண்ட தமிழர்க்கு
          தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
                                                   - புரட்சிப் பாவலர் பாரதிதாசன்

          ஆரியர் திணித்த ஆண்டு மானம்
          அதைக் கையாள்வது அவமானம்
          சீரிய வள்ளுவன் பிறந்த ஆண்டைச்
          செந்தமிழர் யாண்டும் கையாள வேண்டும்.

  
பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்

  • ஆண்டு    :   திருவள்ளுவர் ஆண்டு   ௨௦௪௩(தி.பி.2043)
  • திங்கள்     :   சுறவம்(தை)
  • நாள்         :   ௧(1)
  • கிழமை     :   ஞாயிறு


           தமிழ் ஆண்டு முறையைப் பின்பற்றுவோம்- நாம்
              தமிழர் என்று நிலை நாட்டுவோம்.

                            தரணி முழுதும் வாழ்கின்ற தமிழர்களுக்குத்  
                                    தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




திங்கள், 14 நவம்பர், 2011

பரிதிமாற் கலைஞர் தனித்தமிழ் முன்னோடியா?

(தொடர்ச்சி...)
   வி.கோ.சூ  பார்ப்பனர் என்பதற்காக  யாரும் அவரைப் பழித்தல் சரியன்று. ஆனால், அப்படியிருந்தும் அவர் தமிழ்ப் பற்றிய சில உண்மைகளை மறைக்காமல் வெளிப்படுத்தியுள்ளார். தமிழின் உயர்தனிச் செம்மொழிச் சிறப்பை ஒப்புக் கொண்டிருந்தார், வி.கோ.சூ.   ஆரியப் பார்ப்பனர் தமிழ்மொழி நூல்களை மொழி பெயர்த்துக் கொண்டு மூலத்தை அழித்துவிட்டனர் என்னும் உண்மைகளை எல்லாம் அவர் தம் நூல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது போன்ற பல செய்திகளுக்காக அவரைப் பாராட்டுவது நல்லது.  ஆனால், அதற்காக  'தனித்தமிழ் முன்னோடி'    எனப் பாராட்டுவது சரியாகிவிடாது.
   தனித்தமிழ் முன்னோடி, தனித்தமிழ் அறிஞர், தனித்தமிழ்த் தொண்டர் என்றெல்லாம் யாரையும் எளிதில் ஒப்புக்கொள்ளவியலாது.
  அப்படிச் செய்ய வேண்டுமானால் அதற்குச் சில அடையாளங்கள் தேவை.
  1. தனித்தமிழை உளமார விரும்புதல்.
  அப்படி விரும்புபவரே தலையாய தமிழர் என்பார் பாவாணர். தனித்தமிழை விரும்புதல் என்பது என்ன?
  2. தமிழே திரவிட மொழிகளுக்குத் தாய் என்று ஒப்புக்கொள்வது.
  3. அதுவே ஆரியத்துக்கு மூலம் என ஏற்றுக்கொள்வது.
  4. தமிழன் பிறந்தகம் குமரிக்கண்டம் என்னும் அடிப்படையில் எழுதுவது.
     இப்படிச் சில அடையாலங்களிருந்தால் அத்தகையவர் தலையாய தமிழர் என்பது பாவாணரின் இலக்கணம்.
  'வடமொழியைப் பற்றி அவ்வறிஞரின் அணுகுமுறை யாது?'      என்பதும் அவரைக் கண்டுகொள்ள உதவும்.
  தமிழ் மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் காலந்தோறும் சில பகைவர்கள் இருக்கின்றனர். அவர்களுள் சிலரை நாம் மறக்கவே கூடாது. அவர்களை மறந்தும் மதித்தல் கூடாது.


   சுப்பிரமணி தீட்சிதர், சாமிநாத தேசிகர்  ஆகிய இருவரைக் கட்டாயம் அடையாலன்காட்டியே ஆகவேண்டும்.  அவர்களை ஓர் அறிஞர் பாராட்டுகிறாரா, எதிர்க்கிறாரா?  என்று பார்ப்பது அவரைத் தெரிந்து கொள்ள உதவும். அவர்களைப் பாராட்டுபவர் எத்தகு சிறப்புடையவர் ஆயினும் அவர் தமிழுக்கு நலம் செய்ய மாட்டார் என்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

சுப்பிரமணிய தீட்சிதர்
   'பிரயோக விவாகம்' என்னும் பெயரில் ஒரு தமிழ் நூல் எழுதியவர் சுப்பிரமணிய தீட்சிதர். அந்நூலில் அவர் கூறிய தமிழுக்கு எதிரான கருத்துகளை ௧௯௭௮(1978)இல் தனித்தமிழாளர் க. தமிழமல்லன் அவர்கள் தனித்தமிழ் என்னும் நூலில் வெளிப்படுத்திக் கண்டித்திருந்தார்.
சுப்பிரமணிய தீட்சிதரின் கருத்துகள்
    1)"தமிழ் இலக்கணம் எல்லாம் பிராயிகம் வடமொழியிலக்கான வழியே ஆகும்."
   இன்னச்சுக்கருத்தை வி.கோ.சூ. கண்டிக்கவில்லை. கண்டிப்பதற்கு மாறாக அதற்குத் துணையாகத் தம் கருத்துகளை ஒரு கட்டுரையில் அப்போது வெளிப்படுத்தியுள்ளார்.
   "சுப்பிரமணிய தீட்சிதர் சொன்ன இக்கொள்கையின் உண்மையினை வடமொழி தேன்மொழியின் இயைபு" என்ற உபந்நியாசத்தில்(சொற்பொழிவில்) விரித்து இலக்கண தர்க்க சகிதமான யுக்தியோடு நியாயங்காட்டி ஊர்ஜித(உறுதி)ப் படுத்தியிருக்கிறோம்" என்று கூறுகிறார்.
    2)'அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணிநீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரனங்கலே முதனூல்கள்."

அவருக்கு பரிதிமாற் கலைஞரின் பாராட்டு பின்வருமாறு :
   "இவருடைய கலித்துறைகள் எல்லாம் 'இழுமெனுமொழியின்ஒழுகுறு மருவிபோற்' செவ்வனே அமைந்திருக்கின்றன. இவரின் காரிகைகளைப் படிக்கும்போதே யானந்தம் ஜனிக்கின்றது. காரிகையாள் இலக்கணம் எழுதுவதில் இவ்வளவு கைவந்தவர்கள் கிடைப்பது மிகவும் அருமை என்பது தேற்றம். இவர் உரை வகுக்கும் சாமர்த்தியமோ அற்ப்புதம்! அற்ப்புதம்!! அதிய யுக்தி பக்தியோடும் எழுதப்பட்டிருக்கிறது. இதில் அவருடைய தர்க்க சாஸ்திர வலிமை நன்கு வெளிப்படும்."
   என்று வி.கோ.சூ. தீட்சிதரைப் பாராட்டுகிறார்.
   அவர் கூறியுள்ள இன்னொரு நச்சுக்கருத்தையும் மறுக்காமலும் கண்டிக்காமலும் வி.கோ.சூ. வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த நச்சுக்கருத்து என்ன?
   இவ்வந்தணர் சிகாமணி (சு,ம. தீட்சிதர்) அகத்தியம், தொல்காப்பியம் என்பனவற்றிற்கு முறையே பாணீநீயம், ஐந்திரம் என்னும் வடமொழி வியாகரனங்களை முதநூலேன உரைப்பவர்.
இப்பிடிச் சொல்லும் வி.கோ.சூ. தனித்தமிழ் முன்னோடியா?
   இயல்பான தமிழ் உணர்வுடையவர்கள் தொல்காப்பியத்தை உயர்வாகத்தான் பேசுவார்கள். அதை இழிவு படுத்தியவர் சு.ம. தீட்சிதர்.  அவரைப் போற்றும் வி.கோ,சூவை எப்படி அழைப்பது? யாரும் தொல்காப்பியரை மாற்றுப் பெயரால் அழைக்க மாட்டார்கள். ஆனால் நம் வி.கோ.சூ. தொல்காப்பியரை 'திரண தூமாக்கினி மகாருஷி' என்று அன்பு வணங்க அழைத்து மகிழ்கிறார்.
   'தொல்காப்பியர்' என்னும் நல்ல பெயர் இருக்கும்போது அதையே மாற்றி தம் நூலில் வழங்குபவரைத் தனித்தமிழ் முன்னோடி எனக் கூறலாமா?


தொடரும்...