சனி, 6 ஆகஸ்ட், 2011

மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்

தோன்றல் மூன்று
பாவாணரின் பெருமைகளும் பட்டங்களும்
   தேவநேயப் பாவாணர் நூலகம் சென்னை அண்ணாசாலையில் இயங்கி வருகிறது. இராசபாளையத்திற்கு அண்மையிலுள்ள முறம்பில் இவரது நினைவாக பாவாணர் கோட்டம், முழுவுருவச் சிலை. நூலகம் ஆகியவை அமைக்கப்பெற்று பாவாணர் புகழ் பேசும் மையமாக விளங்குகிறது. தமிழக அரசு வழங்கிய 'செந்தமிழ்ச் செல்வர்', குன்றக்குடி அடிகளார் வழங்கிய 'செந்தமிழ் ஞாயிறு', மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் வழங்கிய 'தமிழ்ப் பெருங்காவலர்', தென்மொழி வழங்கிய 'மொழி ஞாயிறு' போன்ற பட்டங்களும், ௧௭௪(174) சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு.
வாழ்கை நிகழ்வு
   ஒருமுறைப் பாவாணர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, மிதிவண்டியோட்டி ஒருவர் இவர்மீது மோதினார். பாவாணருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. மிதிவண்டியோட்டி, "ஐயா மன்னித்துக் கொள்க" என்றார். "மன்னிப்பு உருதுச் சொல், 'பொறுத்துக் கொள்க' என்று தமிழில் சொல்லுங்கள்" என்றார். பாவாணர். அவரும் அவ்வாறே சொல்ல, "போம், பொறுத்தோம்" என்றார், பாவாணர். இடர்பட்டபோதிலும் சொல்லஆய்வை இமைப்பொழுதிலும் மறக்காத விந்தை மாந்தரே பாவாணர்.
இயற்கையோடு இணைந்தார்
   ௦௫.௦௧.௧௯௮௧ அன்று (05.01.1981) மதுரையில் நடைபெற்ற  உலகத் தமிழ் மாநாட்டின்போது 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்" என்னுந்தலைப்பில் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார். அப்போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ௧௫.௦௧.௧௯௮௧ அன்று(15.01.1981) இரவு ௧௨.௩௦ மணியளவில்(12.30) இயற்கை எய்தினார்.
பாவாணரே பேசுகிறார் 
   "தமிழர் தொன்மையை உலகிற்கு அளித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டுச்  தழைக்கச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலை அடிகள்: நானே மரமாக வளர்ந்து வருகிறேன்" என்பார் பாவாணர். இது உண்மை: வெறும் புகழ்ச்சிஇல்லை.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

தோன்றல் இரண்டு
பாவாணரின் கொள்கைகள்
     "தமிழே உலக முதன் மொழி, தமிழே திராவிடத்திற்குத் தாய், தமிழே வடமொழிக்கு மூலம்" என்னும் கொள்கைகளைக் கொண்ட பாவாணர் தம் வாழ்நாள் முழுவதும் தமிழையே எழுதியும் பேசியும் வந்தார்.  ௨௩(23) மொழிகளில் வேர்ச் சொல் காணும் பன்மொழி அறிஞராக விளங்கியவர் இவர்.
படைப்பாற்றல்
     தமிழே உயர்தனிச் செம்மொழி, தமிழ் வரலாறு, தமிழர் முதன்மொழி, முதல் தாய்மொழி, தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, தமிழர் மதம், மண்ணிலே விண், பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திருக்குறள் தமிழ் மரபுரை என ௪௩(43) நூல்களும், ஏறத்தாழ ௨௦௦(200) கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


தேவநேயப் பாவாணர்  
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி
      பாவாணர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குனராக ௦௮.௦௫.௧௯௭௪ அன்று (08.05.1974) பணியமர்த்தம் பெற்றார். தமிழக அரசின் உதவியோடு, சொற்கள் பிறக்கும் முறையை விளக்கும் சொற்பிறப்பியல் அகர முதலி இவரால்  தொடங்கப்பெற்று இன்று சில பகுதிகள் வெளிவந்துள்ளன. இதன்மூலம் பாவாணரின் மிகுந்த பெருமை விளங்கும்.
பாவாணரின் பண்பு நலன்கள்
   "எனக்கு வறுமையும் உண்டு: மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு" என்று கூறியத் தன்மானமிக்கவர். வறுமையில் வாடுங்காலத்திலும், கையில் பணம் கிடைத்தல் நூல்களே வாங்குவார். புலமைச் செருக்கில்லாமல் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர். நன்றியுணர்வு மிக்கவர். சிறு சிறு உதவிகள் செய்தோரையும் போற்றிப் புகழும் இயல்பினர். இசையில் மிகுந்த புலமை மிக்கவர். ஆராய்ச்சியில் இமயத்தின் உச்சி. பழகுவதில் மழலைக் குழந்தை. கண்ணொளி குன்றியபோதும், தளர்நடை வந்தபோதும் தமிழ் ஆராய்ச்சியை  நெகிழவிடாத தமிழின் வடிவம்.
  "பத்து உருவா இருந்திருந்தால்  என் மனைவியை இன்னியங்கியில் கொண்டு சென்று பிழைக்க வைத்திருப்பேன்" என்பதும், "உருவா ஐந்து அனுப்பி வைத்தால் செந்தமிழ்ச் செல்விக்கு ஒரு சிறந்த கட்டுரையை அனுப்பி வைப்பேன்' என்பதும் இவர்தம் வறுமையை எடுத்துக்காட்டும் சான்றுகளாகும்.

                                                                                                                                   தோன்றும்...

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

தோன்றல் ஒன்று
   "உலகின் முதல் மொழி தமிழே" எனும் கருத்தை அழகுற நிலைநாட்டிய மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரே பாவாணர் என வழங்கப்பெறுகிறார்.
   தேவநேயப் பாவாணர், ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கிய ஞானமுத்தருக்கும். பரிபூரணம் அம்மையாருக்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன் கோவிலில் ௦௭.௦௨.௧௯௦௨  அன்று (07.02.1902) பிறந்தார். இவர்தம் இயற்பெயர் தேவநேசன். இவர்தம் ஐந்தாம் அகவையிலேயே இவருடைய பெற்றோர் இயற்கை  எய்தினர். இளமையில் வறுமையில் வாடிய பாவாணர் தம் தமக்கையார் அரவணைப்பில் வளர்ந்தார்.
   முறம்பிலுள்ள சமயப் பரப்புத்துரைச் சார்ந்த பள்ளியில் இவர் தொடக்கக் கல்வி பயின்றார். அங்கிருந்த மிசெளரி நல்லஞ்சல் உலுத்திரன் சமயப் பரப்புத்துரைச் சார்ந்த நடுநிலைப்  பள்ளியில் இவர் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றார். எங்கு என்னும் துரைமகனாரின் கடனுதவி பெற்று பாளையங்கோட்டை திருச்சபை கழக உயர்நிலைப் பள்ளியில் இவர் பதினோராம் வகுப்பு வரை பயின்று தேறினார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிததத் தேர்விலும், திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கப் புலவர்த் தேர்விலும் பாவாணர் வெற்றி பெற்றுச் சிறப்புற்றார். பாளையங்கோட்டைப் பள்ளியில் பயின்றபோது இவரது பாட்டெழுதும் ஆற்றலைக் கண்டு வியந்த இவர்தம் ஆசிரியர் மாசிலாமணி என்பார் 'தேவநேச கவிவாணர்' என்று இவருக்குப் பெயர் சூட்டினார். இவர் இதனைத் தூய தமிழில் தேவநேயப் பாவாணர் என மாற்றிக்கொண்டார்.
   தாம் பயின்ற சீயோன்மலை எனப்படும் முறம்பிலுள்ள நடுநிலைப் பள்ளியில் இவர் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். பின்னர் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பன்னிரண்டு ஆண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிப் பெருமை சேர்த்தார். இறுதியாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  'திராவிட மொழி ஆராய்ச்சித்துறை' வாசகராக பணிபுரிந்து தமிழில் பல்வேறு ஆராய்சிகள் செய்தார்.

                                                                                                                         தோன்றும்...